பிரபல யூடியூபரும், பிக் பாஸ் ஓடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் குருகிராமில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமில் உள்ள எல்விஷ் யாதவ் வீட்டில், இன்று அதிகாலை 5:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களில் இருவர் பைக்கிலிருந்து இறங்கி, வீட்டை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். சுமார் 25 முதல் 30 குண்டுகள் வீட்டை நோக்கி பாய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், மூவரும் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் உடனடியாக எல்விஷ் யாதவின் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.