நாட்டில் சமீப காலமாக ஆங்காங்கே மூடநம்பிக்கை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது. கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆங்காங்கே இதுபோன்று மற்றவர்களை நரபலி கொடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. ஆனால் குஜராத்தில் தங்களை தாங்களே தம்பதியர் பலி கொடுத்து நரபலி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் ஹேமுபாய் மக்வானா, ஹன்சாபென். இவர்களுக்கு மூடநம்பிக்கை விவகாரங்களில் நம்பிக்கை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் தங்களை தாங்களே பலி கொடுத்து யாகம் செய்ய முடிவெடுத்துள்ளனர். வீட்டில் குழந்தைகள், பெற்றோர்கள் இல்லாத சமயம் இந்த நரபலியை அரங்கேற்றிய இவர்கள் தங்கள் தலையை தாங்களே வெட்டிக் கொள்வதற்கான இயந்திரத்தையும் வீட்டிலேயே செய்துள்ளனர். அந்த இயந்திரத்தால் வெட்டப்பட்ட தலை ஹோம குண்டத்தில் விழும்படி செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளுமுன் எழுதிய கடிதத்தில் தங்கள் குழந்தைகள், பெற்றோரை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி உறவினர்களுக்கு எழுதியுள்ளனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.