நிவாரண பொருட்களை திருடிய அரசு அதிகாரிகள் - கேரளாவில் அதிர்ச்சி

ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (11:37 IST)
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடெங்கிலிருந்து வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை திருடிய அரசு அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். 350க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியா முழுவதும் கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கேரளாவில் நிலைமை சீராகி வருகிறது.
இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் வினியோகிப்பதை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த 2 அரசு திருட்டு அதிகாரிகள் தாமஸ், தினேஷ் ஆகிய இருவரும் நிவாரணப் பொருட்களை திருடி அதனை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
 
அவர்கள் மீது சந்தேகமடைந்த மக்கள், இதுகுறித்து போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் அரசு அதிகாரிகள் இருவரிடம் விசாரித்தபோது, நிவாரண பொருட்களை அவர்கள் திருடியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தாமஸ், தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். வேலியே பயிரை மேய்தது கணக்காய் அதிகாரிகளே பொருட்களை திருடிய சம்பவம் கேரள மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்