மும்பையில் கடந்த சில நாட்களாகப் பெய்த அதிகபடியான மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்று கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகியது. இந்நிலையில் இன்று மக்கள் மிகுந்த சிரமத்துடன் சாலைகளைக் கடப்பதும், சாலையில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்திற்கு இடையே பணியாளர்கள் வேலை செய்வதும், குழந்தைகளை தாய்மார்கள் இடுப்பில் தூக்கி செல்வதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் மழை எப்போது வரும் என ஊரே எதிர்பார்த்து நிற்க, இன்னொரு பக்கம் மழை எப்போ நிக்கும் என எதிர்பார்க்கும் அளவு வெளுத்துவாங்கி கொண்டு இருக்கிறது. மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரமெங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இன்று சாலையில் செல்லமுடியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் வேலைக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள், பள்ளிக்குச் செல்லுவோர் என அனைவரும் தேங்கிய நீரில் பாதுகாப்பாக மிகுந்த சிரமத்துடன் சாலையைக் கடந்து சென்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மழை இல்லாத போது வருந்துவது வாடிக்கைதான், அப்படி மழை வரும் போது அதை முறையாக பேணிக்கொள்வது அரசின் கடமை என்று உணர்தால் வீணாகும் மழை நீர் பூமிக்குச் சேமிப்பாகும் என்று பலரும் தெரிவித்துவருகின்றனர்.