குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பாலத்தில் பிஸியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததை அடுத்து, வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததாகவும், இதில் ஒன்பது பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் உள்ள கம்பிரா-முஜ்பூர் பாலத்தில் பிஸியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இதனை அடுத்து வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்த தகவல் அறிந்த உடனடியாக தீயணைப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். உள்ளூர் மக்களும் மீட்பு பணிக்கு உதவி செய்ததாக தெரிகிறது. இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாகவும், பல படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை விசாரிக்கத் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய குஜராத்தில் உள்ள இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் இந்த பாலம், பயணம் செய்பவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானதாக இருந்தது. இந்த பாலம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே இது குறித்து பலர் எச்சரிக்கை செய்தும் அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஆற்றில் விழுந்த வாகனத்தில் இருந்தவர்கள் சிலர் காணாமல் போய்விட்டதாகவும், அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆற்றில் விழுந்த வாகனங்களை மீட்க கிரேன் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.