கள்ள நோட்டுகள் புழங்க காரணம் ப.சிதம்பரம்?: சுப்பிரமணியன் சாமி பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (12:40 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது அவற்றை வங்கிகளில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் மோடியும், ரிசர்வ் வங்கி கவர்னரும் நேற்று முன்தினம் அறிவித்தது.


 
 
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், வரவேற்பும் வருகிறது. இந்த திட்டம் கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளை அழிக்கவும் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததற்கு ப.சிதம்பரமே முக்கிய காரணம் என்று பாஜக மூத்தத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாவாமி கூறியுள்ளார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், பிரதமரின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். நாட்டின் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கிய நடவடிக்கையாகும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக நாம் சில வழிகளை பின்பற்ற வேண்டும். தீவிரவாதத்துக்கு முக்கிய நிதி ஆதாரமே கறுப்புப்பணமும் கள்ள நோட்டுகளும்தான் என்றார்.
 
மேலும் இந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே ப.சிதம்பரம் தான். அவர் நிதியமைச்சராக இருந்தபோது நமது ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பிரிட்டிஷ் நிறுவனமான ‘டி லா ரூ’ நிறுவனத்துக்கு வழங்கினார்.
 
இதனால் நம்முடைய ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தானுக்கு எளிதில் கிடைத்துவிட்டது. மேலும், காஷ்மீரில் நடக்கும் அனைத்து தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானில் இருந்தே நிதி கிடைத்துள்ளது என்றார்.
அடுத்த கட்டுரையில்