இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது குரல் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் முனபணமாக 1.30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. முன்பணம் 1.30 கோடி ரூபாய் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பேசிய செல்போன் உரையாடல் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால் இருவரின் குரலையும் சோதனை செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கை மீதான விசாரணை கடந்த 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் வந்தது. அப்போது தினகரன் மற்றும், சுகேஷ் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த குரல் சோதனைக்கு தினகரன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே கருத்து கேட்காமல் இந்த குரல் சோதனை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இந்த சோதனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு மீதான விசாரணையின் போது டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளைச் சோதனை செய்ய காவல்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.