”கருத்து சுதந்திரம் வேண்டும்”..வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி, திடீர் ராஜினாமா..

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (10:39 IST)
கேரளா வெள்ளத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கு 488 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்தனர். வெள்ளப்பாதிப்புக்கு உண்டான கேரளாவிற்கு பல மாநிலங்கள் மீட்பு உதவிகரங்கள் நீட்டின.

இதில் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியும் உதவி கரம் நீட்டியது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி சார்பாக அந்த யூனியன் பிரதேசத்தின் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத், கேரளாவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடியை, கேரளா முதல்வர் பிரனாயி விஜயனிடம் ஒப்படைக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கேரளா வந்தார்.

இவரது வீடும் கேரளாவில் தான் உள்ளது. பணத்தை ஒப்படைத்து விட்டு திரும்ப செல்லலாம் என நினைத்தவர், கேரளாவின் நிலையை பார்த்துவிட்டு திருவனந்தபுரம் சென்றார். அதை தொடர்ந்து அவர் 10 நாட்களாக, தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதை மறைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டார். அதன் பின்பு யூனியன் பிரதேசம் சென்று தனது ஐஏஎஸ் பணிகளை தொடர்ந்தார்.

கண்ணன் கோபிநாத் கேரளாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதை அறிந்த அரசு, அவரது விடுப்பு நாட்களை வேலை நாட்களாக கணக்கெடுத்து கொண்டது. இந்நிலையில் தற்போது கண்ணன் கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது ராஜினாமா கடிதத்தில், தன்னுடைய கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த நினைக்கிறேன். இந்த பதவியில் இருந்தால் அது முடியாது, ஆதலால் இந்த பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது ராஜினாமா கடிதம் ஏற்கப்படும் வரை கண்ணன் கோபிநாத் ஐஏஎஸ் பணியில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்