முடிவுக்கு வருகிறது யுஜிசி: புதிய அமைப்புக்கு மத்திய அரசு திட்டம்

புதன், 27 ஜூன் 2018 (19:58 IST)
பல்கலைக்கழக மானியக் குழு என்ற அமைப்பு கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் இந்த அமைப்புக்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்றை தோற்றுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த ஆணை விரைவில் வெளிவரும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 1956ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசால் உருவாக்கப்பட்டது யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு. பல்கலைக்கழக கல்வி, உயர்கல்வி ஆகியவற்றை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், மேம்படுத்தவும் இந்த அமைப்பு பயன்பட்டு வந்தது. மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் டெல்லியிலும், புனே, போபால், ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, கவுகாத்தி போன்ற நகரங்களில் கிளை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் யுஜிசி அமைப்புக்கு பதிலாக தேசிய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, 'வரலாற்றுச்சிறப்பு மிக்க முடிவு எடுத்திருக்கிறோம். யுஜிசி அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஆணையம் கொண்டு வருகிறோம். அதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை மேம்படுத்தி, மாணவர்களின் திறனைமேம்படுத்தும் வகையில் மாற்றப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்