ஆசிய - அமெரிக்கர்ளுக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பாகுபாடு?

திங்கள், 18 ஜூன் 2018 (13:58 IST)
ஆசிய- அமெரிக்கர்களின் விண்ணப்பதாரர்களுக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பாகுபாடு காண்பிப்பதாக, லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

 
ஆசிய - அமெரிக்கர்களை விட குறைந்த தகுதியுடைய, வெள்ளை, கறுப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க மாணவர்களை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் விரும்பி தேர்வு செய்வதாக நியாயமான மாணவ சேர்க்கைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
 
தனிப்பட்ட பண்புகள் காரணமாக ஆசிய - அமெரிக்க விண்ணப்பங்களை தொடர்ந்து மிகக் குறைவாக மதிப்பிட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதனை மறுத்துள்ளது. ஆசிய அமெரிக்கர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
ஹார்வர்ட் பல்கலைக்கழக இணையதளத்தில், தற்போதைய நிலவரப்படி 22.2 சதவீத ஆசிய அமெரிக்க மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
14.6 சதவீத அளவில் ஆஃபிரிக்க - அமெரிக்க மாணவர்களும், ஸ்பெயின் அல்லது லத்தீன் மாணவர்கள் 11.6 சதவீதம் உள்ளனர். 2.5 சதவீத பூர்வீக அமெரிக்கர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
மற்ற பிரிவுகளில், முக்கியமாக வெள்ளை இன மாணவர்கள் 50 சதவீதத்திற்கும் கீழ்தான் உள்ளனர்.

 
நியாயமான மாணவ சேர்க்கைக்கான அமைப்பு கூறுவது என்ன?
 
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், வெவ்வேறு இனங்களில் மாணவர் சேர்க்கையில் சமநிலையை கடைபிடிப்பதாகவும், இனம் என்ற ஒன்றை ஒரு கூடுதல் காரணியாக பயன்படுத்துவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
 
"உதாரணமாக ஆசிய - அமெரிக்க விண்ணப்பத்திற்கு அனுமதி கிடைக்க 25% வாய்ப்பிருந்தால், இதுவே வெள்ளை இனத்தவராக இருந்தால் 35% வாய்ப்பும், ஸ்பானிய மொழி பேசக்கூடியவராக இருந்தால் 75% வாய்ப்பும் மற்றும் ஆஃபிரிக்க - அமெரிக்கராக இருந்தால் 95% வாய்ப்பும் இருக்கிறது"
 
ஆனால், பெண் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்களை நியாயமான மாணவ சேர்க்கைக்கான அமைப்பு வழங்கவில்லை.
 
இது தொடர்பாக 2013ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகமே ஒரு ஆராய்ச்சி நடத்தி இதே முடிவிற்கு வந்ததாகவும் ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பதில் என்ன?
 
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹார்வர்ட், மாணவ சேர்க்கைக்கான அமைப்பின் தகவல்கள் குறைபாடு உடையது என்றும் இது தவறாக வழிநடத்துவதாகவும் கூறியுள்ளது.
 
"எந்த பிரிவில் இருக்கும் மாணவர்களுக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை என்றும், கடந்த பத்தாண்டுகளில் ஆசிய - அமெரிக்கர்களின் சேர்க்கை விகிதம் 29% உயர்ந்துள்ளது" என்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்