இந்தியா முழுவதும் பல கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தி உயிரிழந்தவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் தடுப்பூசி செலுத்துவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற பயமும் மக்களுக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் மாநிலங்களவை விவாதத்தில் தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை ராஜ்ய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளார். அதில் நாட்டில் 3 நிறுவனங்களின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 946 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பாதிப்புகள் காரணமாக 1,019 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 89 பேர் மரணமடைந்தது குறித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேர் தடுப்பூசியால் இறந்துள்ளனர். 58 பேர் தற்செயலாகவும், 16 பேர் வரையறுக்க முடியாத நிலையிலும் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.