பாஸ்டேகுக்கே பாதி காசு போச்சு.. இப்போ புது திட்டமா? – மத்திய அரசின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

வெள்ளி, 18 டிசம்பர் 2020 (16:23 IST)
நாடு முழுவதும் சுங்க சாவடி இல்லாத தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் சுங்க வரி வசூலிக்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை நாட்களாக பணமாக மட்டுமே வரி வசூலிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் பாஸ்டேக் கட்டண முறையில் பல்வேறு குழறுபடிகளும் நிகழ்வதால் பாஸ்டேக் மற்றும் நேரடி கட்டணம் இரண்டு வகையிலும் சுங்க சாவடிகளில் வரி வசூலிக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி வாகனத்தின் இயக்கம் ஜிபிஎஸ் மூலம் கணக்கிடப்பட்டு இயக்கத்தை பொறுத்து கட்டணம் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்படி ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் சுங்க சாவடி இல்லாத இந்தியா உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்ட போதே அதிகமான கட்டணம் வசூலித்தல், பயணிக்காத வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டணம் பிடித்தல் என குளறுபடிகள் ஏற்பட்டதால் இந்த புதிய திட்டத்தில் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் பெறப்படும் என கூறப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் ஒவ்வொரு சுங்க சாவடியாக மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய சுமையை இது குறைக்கும் என்பதால் வரவேற்பும் இருந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்