2020ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 அரசியல்வாதிகள்! – மோடி முதல் ராகுல் வரை!

வியாழன், 17 டிசம்பர் 2020 (12:34 IST)
ஒருவழியாக 2020ம் ஆண்டின் இறுதி மாதத்தை உலகம் எட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டின் டாப் 10 விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

மற்ற எந்த ஆண்டுகளை விடவும் இந்த 2020ம் ஆண்டு மக்களுக்கு மோசமான ஆண்டாகவே இருந்துள்ளது. கொரோனாவால் பல நிகழ்வுகள் முடங்கிய நிலையிலும், கொரோனாவை தாண்டி மக்களால் அதிகம் பேசப்பட்ட, யாஹூவில் அதிகம் தேடப்பட்ட இந்திய அளவிலான அரசியல்வாதிகளின் டாப் 10 பட்டியல் இதோ..!

10. ஜோதிராத்ய சிந்தியா
 

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் முக்கிய அரசியல்வாதியாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. முன்னதாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இவர் இந்த வருடத்தில் மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் உடன் ஏற்பட்ட உரசல் காரணமாக காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்

09. சோனியா காந்தி
 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருப்பவர் சோனியா காந்தி. நேரு குடும்பத்தில் மிகவும் மூத்தவராகவும், காங்கிரஸில் மூத்த தலைவர்களில் முக்கியமானவராகவும் உள்ள இவர் ராகுல் காந்தி பதவி விலகலுக்கு பிறகு அகில இந்திய காங்கிரஸின் தற்காலிக தலைவராக உள்ளார்.

08. நிர்மலா சீதாராமன்
 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக பாஜகவால் நிதி அமைச்சர் பதவிக்கு தகுதி பெற்றவர். ஆண்டு பட்ஜெட் முதல் வெங்காய தட்டுப்பாட்டின் போது பேசியது வரை பல விஷயங்களில் வைரலாக பேசப்பட்டவர். இந்திய அரசியலில் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர்.

07. பிரணாப் முகர்ஜி
 

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. இந்த ஆண்டில் உடல்நல குறைவால் நீண்ட காலம் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனளிக்காமல் ஆகஸ்டு 31 அன்று காலமானார்.

06. மம்தா பானர்ஜி
 

மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவருடைய திரிணாமூல் காங்கிரஸுக்கும், பாஜக கட்சிக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் மேற்கு வங்கத்தில் இரு கட்சியினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் திட்டங்களையும், பிரதமரையும் அடிக்கடி விமர்சித்து பேசி வருவதால் இந்த ஆண்டிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

05. அரவிந்த் கெஜ்ரிவால்
 

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமாக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முழுவதும் பல்வேறு வசதிகள், இலவச வைஃபை ஆகியவற்றை ஏற்படுத்தியிருந்தாலும், குடியுரிமை சட்ட போராட்ட வன்முறை, கலவரம், டெல்லி காற்று மாசு, கொரோனா உள்ளிட்டவற்றால் தொடர்ந்து பேசப்படும் நபராக இருந்து வருகிறார்.

04. உத்தவ் தாக்கரே
 

சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமாக இருப்பவர் உத்தவ் தாக்கரே. மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைய வேண்டும் என்ற தனது தந்தை பால் தாக்கரேவின் கனவை இந்த ஆண்டில் நிறைவேற்றியவர். தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியை கலைத்ததும், எதிர்கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்ததும், கொரோனா செயல்பாடுகளும் இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட நபராக உத்தவ் தாக்கரேவை மாற்றியுள்ளது.

03. அமித்ஷா
 

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். ராஜதந்திரி என்றும் அரசியல் சாணக்கியர் என்றும் அழைக்கப்படும் அமித்ஷா பல மாநிலங்களில் பாஜகவின் வெற்றி வியூகத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

02. ராகுல் காந்தி
 

அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கடந்த ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவராக தீயாக வேலை செய்தும் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியவர். விவசாயிகள் போராட்டம், கொரோனா, குடியுரிமை சட்டம் என பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.

01. நரேந்திர மோடி
 

பிரதமராய் பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் அதிகம் பேசப்படும் நபராக வலம் வருபவர் நரேந்திர மோடி. மாதம் தோறும் மன் கீ பாத், வெளிநாட்டு பயணம், வெளி நாட்டு தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருதல் மற்றும் திடீர் அறிவிப்புகளால் நாள்தோறும் அதிகம் பேசப்படும் நபராக நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து வருகிறார் பிரதமர் மோடி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்