மேலும் 2 வார கால அவகாசம் - கர்நாடக தேர்தல் காரணமா?

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (12:00 IST)
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் கால அவகாசம் கேட்கிறது என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 
 
இந்த வழக்கானது கடந்த 9 ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார  கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது மனு அளித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.
 
கர்நாடகாவில் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்த விவகாரத்தில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கக் கூடாது என்பதில் பாஜக உறுதியாகவும் இருக்கிறது. எனவேதான், மே 3ம் தேதி வரைவு திட்டத்தை சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், மத்திய அரசு மீண்டும் 2 வார கால அவகாசம் கேட்டுள்ளது. 
 
அதாவது, மே 3ம் தேதியிலிருந்து 2 வாரம் எனில், அதற்குள் கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும். அதற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற அரசியல் நோக்கத்திற்காகவே மத்திய அரசு இப்படி தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையில் விளையாடுகிறது என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்