திடீரென விமானத்தின் உள்ளே வந்த தேனீக்கள் கூட்டம்.. பயணிகள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

Mahendran

செவ்வாய், 8 ஜூலை 2025 (11:16 IST)
விமானம் கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, திடீரென தேனீக்கள் கூட்டம் விமானத்தின் சரக்கு வைக்கும் இடத்தில் இருந்து வெளியே வந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சூரத்திலிருந்து ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய விமானம் நேற்று மாலை 4:20 மணிக்கு கிளம்ப தயாராக இருந்த நிலையில், திடீரென விமானத்திலுள்ள சரக்கு பெட்டகத்திலிருந்து தேனீக்கள் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனீக்களை விரட்ட விமான ஊழியர்கள் புகையை பயன்படுத்தினர். ஆனால், அது பலனளிக்காததால், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்களை விரட்டினர். அதன் பின்னரும் தேனீக்கள் விடாப்பிடியாக இருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து அனைத்து தேனீக்களும் விரட்டப்பட்டன. இதனையடுத்து, ஒரு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் கிளம்பியதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து விமானத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம். இருப்பினும், தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். அதன் பிறகு பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானம் புறப்பட்டது" என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்