அமைச்சர் மீது தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (11:54 IST)
கேரள மாநில விளையாட்டு துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் மீது கேரள விளையாட்டு கவுன்சில் உறுப்பினரும், பிரபல தடகள வீராங்கனையுமான அஞ்சு பாபி ஜார்ஜ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.


 

 
தற்போது கேரளாவில் அமைந்துள்ள இடது சாரிகள் கூட்டணி அரசில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இ.பி. ஜெயராஜன் சர்ச்சைகளில் சிக்கி வருவது அதிகரித்துள்ளது.
 
சமீபத்தில் மரணமைடைந்த அமெரிக்க பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டபோது, முகமது அலி கேரளாவுக்காக நிறைய பதக்கங்கள் வாங்கி கொடுத்தவர் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில்தான் அஞ்சு ஜார்ஜ், கேரள முதல்வரிடம் அவரை பற்றி புகார் கூறியுள்ளார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சு ஜார்ஜ் “விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் இ.பி.ஜெயராஜனுக்கு விளையாட்டு பற்றி ஒன்றுமே தெரியவில்லை. விளையாட்டு கவுன்சிலை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சந்தேகப்பட்டு எங்களை பழி வாங்குகிறார். முதல் ஆலோசனை கூட்டத்திலேயே எங்களிடம், மிகவும் கோபமாக நடந்து கொண்டார்.
 
நான் அரசு ஒப்புதலுடன் சமீபத்தில் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணம் செய்தேன். ஆனால் லஞ்சப்பணத்தில்தான் நான் சென்றேன் என்று கூறினார். அவர் கூறுவதை ஏற்க முடியாது. விளையாட்டு கவுன்சில் ஏற்கனவே பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவை தடாலடியாக ரத்து செய்துள்ளார். இதனால் பலரது வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று அஞ்சு ஜார்ஜ் கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்