கனமழை எதிரொலி: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!

Siva
ஞாயிறு, 7 ஜூலை 2024 (08:27 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது கனமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி யாத்திரை தொடங்கியது. இதில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் கனமழை பெய்து வருவதாகவும் இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை ஜம்முவில் இருந்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரைக்கு சென்றதாகவும் இவர்களில் சிலர் பாரம்பரிய பாதை வழியாக செல்ல திட்டமிட்ட நிலையில் அந்த பகுதியில் கனமழை பெய்ததால் அவர்கள் இடையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் ஜூன் மாத இறுதியில் சிவலிங்கம் பனி வடிவில் காணப்படும். இந்த பனிலிங்கத்தை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டும் யாத்திரை தொடங்கப்பட்டது.

ஆனால் யாத்திரை தொடங்கப்பட்ட சில நாட்களில் கனமழை காரணமாக இந்த யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் சில நாட்களில் மழை குறைந்த பிறகு மீண்டும் யாத்திரை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் யாத்திரை செல்லும் வழியில் கனமழையால் சிக்கிய பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்