சோதனை மேல் சோதனை: கேரளாவில் மீண்டும் பலத்த மழை என எச்சரிக்கை

சனி, 18 ஆகஸ்ட் 2018 (09:18 IST)
கேரளாவில் ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்துள்ளது. வெள்ளத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டு வருவதால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த துயரில் இருந்து கேரள மக்கள் மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் சோதனை மேல் சோதனையாக மீண்டும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் உள்ள கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்றும், மழை மட்டுமின்றி மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்  என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஏற்கனவே பெய்த மழையின் துயரத்தில் இருந்தே மீள முடியாமல் தவிக்கும் கேரள மக்களுக்கு இந்த வானிலை அறிக்கை பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. கனமழை குறித்த வானிலை எச்சரிக்கையை அடுத்து கேரள அரசு தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய தீவிரமாக முயற்சித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்