சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் மாநில தேர்தலில் 16 ஆண்டுகள் சிறையில் இருந்த மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா அம்மாநில முதல்வரை எதிர்த்து போட்டியிட்டு வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தல் தோல்வியால் மனம் விரக்தி அடைந்த அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த கையோடு மன அமைதிக்காக கேரளாவில் உள்ள அட்டப்பாடிக்கு வருகை தந்துள்ளார்.
தமிழக, கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடியில் பழங்குடியின மக்கள் அதிகளவு வசிக்கின்றனர். இவர்களிடையே ஒரு மாதம் வரை தங்கி, ஓய்வு எடுக்க, இரோம் ஷர்மிளா திட்டமிட்டுள்ளார். இதற்காகவே, தற்போது அவர் அங்கு வந்துள்ளார் என்று, கூறப்படுகிறது.
கேரளாவுக்கு வந்த இரோம் ஷர்மிளாவுக்கு அப்பகுதி பழங்குடி இன மக்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய சமூக சேவையும் அநீதிக்கு எதிரான போராட்டமும் தொடரும் என்றும் மாணவர்களை வழிநடத்தவுள்ளதாகவும் அவர் பழங்குடி இனமக்களிடம் தெரிவித்தார்.