அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியை இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேற்ற வலியுறுத்துவோம் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான், "கெஜ்ரிவால் கட்சி லோக்பால் போராட்டத்தின் மூலம் டெல்லியில் ஆட்சி அமைத்தார். ஆனால், லோக்பால் அமைக்க தவறிவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை அவர் மறந்துவிட்டார்," என்று கூறியுள்ளார்.
அவர் மேலும், "டெல்லியை லண்டன் ஆக்குவோம் என்று கூறிய கெஜ்ரிவால், டெல்லியை மாசுபட்ட நகரமாக மாற்றிவிட்டார். நாட்டிலேயே பெரிய மோசடி மன்னன் கெஜ்ரிவால். அவர் ஒரு தேச துரோகி. நடைமுறையில் இல்லாத நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளிக்கிறார்," என்று கூறியிருந்தார்.
இந்த கருத்தால் ஆம் ஆத்மி கட்சியினர் கொந்தளித்துள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், "கெஜ்ரிவால் குறித்து தேசத்துரோகி என்று விமர்சனம் செய்த அஜய் மக்கான் மீது காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம்," என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்து, இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.