உத்தவ் தாக்கரேவை விமர்சித்த நபர்! – மொட்டையடித்த சிவசேனா கட்சியினர்!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (14:15 IST)
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த நபரை சிவசேனா கட்சியினர் மொட்டை அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஹிராமனி திவாரி. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் குறித்து தனது ஃபேஸ்புக் மூலம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் திவாரி. டெல்லி ஜாமியா மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பேசியிருந்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரேயின் இந்த கருத்தை விமர்சித்து சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஹிராமனி. இதற்கு சிவசேனா கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து கமெண்டில் திட்டியுள்ளனர். மேலும் சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அவர் பேஸ்புக்கில் இருந்து அந்த பதிவை நீக்கியுள்ளார். அதற்கு பிறகும் கடந்த ஞாயிற்று கிழமை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 30க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியினர் அவரை அடித்து, உதைத்து வெளியே இழுத்து சென்றுள்ளனர். பிறகு வீட்டிற்கு வெளியே வைத்து அவருக்கு மொட்டை அடித்துள்ளனர். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் வைரலானது. இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்