பிறந்த குழந்தைக்கு உரிமம் கொண்டாடிய 3 தந்தைகள்… தலைசுற்றிப்போன மருத்துவர்கள்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (12:14 IST)
மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு, தந்தை என்று 3 வாலிபர்கள் உரிமம் கொண்டாடிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த 21 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சென்ற வாரம் சனிக்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த வாலிபர் ஒருவர், தன்னை பெண்ணின் கணவர் என்று கூறி மருத்துவமனையில் முன் தொகை செலுத்தியுள்ளார்.

அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணிற்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு வந்த மற்றொரு வாலிபர், ”அந்த பெண்ணிற்கு நான் தான் கணவன், ஆதலால் அந்த குழந்தை எனக்கு பிறந்த குழந்தை” என உரிமை கோரியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகிகள், ஏற்கனவே ஒரு வாலிபர் மருத்துவமனை ஆவணங்களில் தன்னை அந்த பெண்ணின் கணவர் என கூறி கையெழுத்திட்டு பணம் செலுத்திய விஷயத்தை கூறினர். இதை கேட்ட அந்த வாலிபர் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து நடந்த போலீஸ் விசாரணையில், இரண்டாவதாக வந்த அந்த வாலிபர், இளம்பெண்ணுடன் தனக்கு நடந்த திருமண சான்றிதழை காட்டியுள்ளார். அவற்றை பார்த்த போலீஸார், இவர் தான் அந்த பெண்ணின் கணவராக இருக்கமுடியும் என தீர்மானித்தனர். இந்நிலையில் அடுத்த நாளான திங்கட்கிழமை, மாலை மூன்றாவதாக ஒரு வாலிபர், “நான் அந்த பென்ணின் கணவர் அல்ல, ஆனால் அவருக்கு பிறந்த குழந்தை என்னுடையது” என உரிமை கோரினார். இதனை கேட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு தலையே சுற்றியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணிடமே போலீஸார் விசாரனை நடத்தினர். அப்போது இரண்டாவதாக வந்த வாலிபர் தான் தனது கணவர் எனவும், அவர் தான் குழந்தையின் தந்தை எனவும் கூறினார்.

அதாவது, அந்த பெண்ணும், இரண்டாவதாக தந்தை உரிமை கோரிய அந்த வாலிபரும், ஒருவரையொருவர் காதலித்து வந்தபோது நெருக்கமாக பழகியுள்ளனர். இது வாலிபரின் குடும்பத்திற்கு தெரிய வந்ததும், அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த நிலையில் இளம் பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் தன்னை உடனே திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த வாலிபரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளமுடியாது என வாலிபர் மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண், போலீஸில் அந்த வாலிபரின் மேல் கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீஸ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதன் பிறகு அந்த இளம்பெண் மற்ற வாலிபர்களுடன் பழகி உள்ளார். அந்த சமயத்தில் அப்பெண்ணின் பிரசவ காலமும் நெருங்கி வந்தது. இதனிடையே அந்த பெண்ணின் காதலன் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துவிட்டார்.

கடந்த ஞாயிற்றுகிழமை அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் ஆப்-ல் புரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார். இதைப் பார்த்த அந்த காதலன், மருத்துவமனைக்கு வந்தபோது தான், ஏற்கனவே ஒருவர் பெண்ணின் கணவர் என முன் தொகை கட்டிய தகவலை அறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் இரண்டாவதாக தந்தை உரிமை கோரிய வந்த வாலிபர் தான் பெண்ணின் கணவர் என உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்