இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

Prasanth Karthick

திங்கள், 28 ஏப்ரல் 2025 (09:54 IST)

வல்லரசாகும் கனவுடன் இந்தியா பயணித்து வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் வேலைவாய்ப்புகள், பொருளாதார வசதிகளில் இன்னும் நிறைவுறாத் தன்மையே நிலவி வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள், தொழில்நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், இந்தியாவில் புதிய நிறுவனங்கள் உருவாவதும், வளர்வதும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த அவசியமாக உள்ளது.

 

இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்டு பட்ஜெட்டில் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கடன் வசதி உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெறுகின்றன. ஆனால் கள நிலவரமோ அதற்கு நேர் எதிராக உள்ளதாக தெரிகிறது. சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வியக்கத்தகு அளவில் நல்ல வளர்ச்சியை கண்டிருந்தாலும், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

 

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டில் 15,921 நிறுவனங்களும், 2024ம் ஆண்டில் 12,717 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அதுபோல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுகளை விட மிகவும் குறைந்துள்ளது.

 

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வங்கிகளில் பெரிய அளவில் கடன் பெற்று தொடங்கப்படும் நிலையில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி அவற்றை விஸ்தரிக்க முடியாமல் போவதும், சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுவது,  வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் திவாலாகி போவதுமே இதற்கான காரணம் என கூறப்படுகிறது. இது இந்தியா தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், இந்திய நிறுவனங்களை வளர்ச்சியடைய செய்வதிலும் எதிர்கால பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளை கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்