வைகை எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம்

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (13:10 IST)
சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் நடைபெறும் மூன்று இளம் பெண் கொலைகளை ஓடும் ரயிலிலேயே கண்டு பிடிக்கும் போலீஸ்தான் ஹீரோ. மூன்று இளம் பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அதில் பயணிக்கும் பிற பயணிகளுக்கு தெரிய வருகிறது. உடனே ரயிலை நிறுத்தி இரயில்வே காவல்துறைக்கு தகவல்  தெரிவிக்கின்றனர்.
 
 
மூன்று இளம் பெண்களில், இரண்டு பேர் இரயிலிலேயே இறந்து போக, நீது சந்திரா மட்டும் மூளைச்சாவு அடைந்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த கொலைகளை பற்றி துப்பு துலக்க முதலில் களம் இறங்குகிறார் சாதாரண இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நாசர். ஒரு கட்டத்திற்கு மேல் அக்கொலை விசாரணை நகராது நின்றதால், அதன் பிறகு அது பற்றி விசாரிக்க ரேக் எனும் ரெயில்வே சிறப்பு போலீஸ் பிரிவு அதிகாரி  ஆர்.கே.வை களம் இறக்குகிறார் தமிழகத்தை சேர்ந்த எம்.பி. சுமன்.
 
இந்த கொலைகள் மற்றும் கொலை முயற்சிக்கான காரணத்தை பல தரப்பட்ட கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த  கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் அடுத்தடுத்து கிடைக்கிறது. 

இறுதியில், அந்த இளம் பெண்களை கொன்ற குற்றவாளி யார்? அவன் ஒரே ஒருத்தன் தானா ..? வேறு பல பேர்  குற்றவாளிகளா....? மூன்று கொலைகளையுமே செய்தது யார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு எக்ஸ்பிரஸ்  வேகத்தில் பதில் சொல்கிறது.
 
ஆர்.கே. மிகவும் துணிச்சலான இரயில்வே சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரியாக ஒடும் இரயிலில் நடக்கும் இளம் பெண்கள் கொலை கேஸில் பக்காவாக துப்பு துலக்கும் பாத்திரத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். டூயல் ரோலில், வரும் நீத்து சந்திரா, தனது இயல்பான நடிப்பால் இரண்டு கேரக்டரிலும் வெவ்வேறு வகையில் தன் நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். அவரை சுற்றி பின்னப் பட்டிருக்கும் மர்மங்கள் விலகும் இறுதிக் காட்சி, எதிர்பாராத திருப்பம்.  தனியார் தொலைக்காட்சி நிருபராக வரும் கோமல் சர்மாவும் கச்சிதம். நடிகையாக வரும் இனியாவைக் காட்டிலும் அவரது  'அக்காவாக வரும் காமெடி டைம் அர்ச்சனா அனைவரையும் ஈர்க்கிறார்.
 
போலீஸ் அதிகாரியாக வரும் நாசர், சீரியஸ் படத்தில் சிரிப்பு போலீஸாக கலகலக்க வைக்கிறார். மைத்துனியையே கொலை  செய்ய துணியும் எம்.பியாக வரும் சுமன், சட்டத்திற்கு புறம்பான சகல காரியங்களையும் செய்யும் ரயில்வே போலீஸ்  ஜான்விஜய், ஜோக்கர் டி.டி.ஆர் -எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்ஸ் பவன், சுஜா வாரூணி, தீவிரவாதி வரும் ஆர்.கே.செல்வமணி என  அதிகபடியான கதாபாத்திரங்கள் என எல்லாமே ரசிக்கும்படியாக உள்ளது.  
 
சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும், தமனின் பின்னணி இசை ஓர் இரவு நேர இரயில் பயணத்தை நம் முன் நிறுத்துகிறது.  இரயிலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பதிவு செய்திருப்பது அருமை. ஷாஜி கைலாஷ் தனது இயக்கத்தில், படம் ஆரம்பித்ததும்,  முடிவதும் தெரியாத அளவிற்கு விறுவிறுப்பான, திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் அதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
 
மொத்தத்தில் வைகை எக்ஸ்பிரஸ் வேகமும், விறுவிறுப்பும் கூடிய எக்ஸ்பிரஸ்.
அடுத்த கட்டுரையில்