இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

Siva

வியாழன், 31 ஜூலை 2025 (09:20 IST)
ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று  இந்திய பங்குச்சந்தை படுமோசமான சரிவை சந்தித்துள்ளது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கிட்டத்தட்ட 700 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால், இந்தியாவுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த வரி ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது.
 
அந்த வகையில், சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் 650 புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து 834 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், நிஃப்டி 195 புள்ளிகள் சரிந்து 24,194 என்ற அளவில் உள்ளது.
 
இன்றைய பங்குச் சந்தையில், நிஃப்டியில் உள்ள 50 நிறுவனங்களில், ஜியோ பைனான்ஸ், எஸ்பிஐ லைஃப், டாட்டா ஸ்டீல் ஆகிய மூன்று பங்குகள் மட்டுமே சற்று உயர்ந்துள்ளன. மற்ற 47 பங்குகளும் சரிவில் விற்பனை ஆகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல் இந்திய பொருளாதாரத்திலும், பங்குச்சந்தையிலும் நேரடி பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பரவலாகியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்