உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய ரத்தம்.. இந்திய பெண்ணுக்கு செய்த சோதனையில் ஆச்சரியம்..!

Siva

வியாழன், 31 ஜூலை 2025 (07:46 IST)
கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்த 38 வயதுப் பெண்ணின் ரத்தத்தில், உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பெண் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, வழக்கமான ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது ரத்தம் ஆர்.எச். பாசிட்டிவ்  வகையை சேர்ந்தது என்பது முதலில் கண்டறியப்பட்டது.
 
இதையடுத்து, அவரது ரத்த மாதிரி பெங்களூரு ரத்த மையத்தில் அமைந்துள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்தப் பெண்ணின் ரத்தம் பான்ரியாக்டிவ் என்ற வகையை சேர்ந்தது என்பதும், இந்த ரத்த மாதிரி இந்தியாவில் வேறு யாருக்கும் இல்லை என்பதும் தெரியவந்தது.
 
இதன் தொடர்ச்சியாக, அந்த ரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சுமார் பத்து மாதங்கள் நடைபெற்ற விரிவான சோதனைகளின் முடிவில், அந்த பெண்ணுக்கு உலகிலேயே யாருக்கும் இல்லாத ஒரு புதிய வகையிலான ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இந்த அரிய ரத்த வகைக்கு தற்போது "CRIP" என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த வகை ரத்தம் கொண்ட முதல் நபர் மட்டுமின்றி, ஒரே நபர் இந்த பெண் தான் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், ஆராய்ச்சிக்கான ஒரு புதிய பாதையாகவும் பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்