கூடுதல் வரிவிதிப்பு விவகாரம்.. பின்வாங்கினார் டிரம்ப்.. இந்தியா தான் காரணமா?

Siva

வியாழன், 10 ஏப்ரல் 2025 (07:52 IST)
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், உலக வர்த்தகத்தில் பெரும் கவலைக்கு காரணமான சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். இந்தியா உள்ளிட்ட சுமார் 75 நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஆனால் சீனாவுக்கு மட்டும் 104% வரி விதிக்கப்பட்டதால், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் உலகம் முழுவதும் ஒரு வகையான வர்த்தக போர் உருவாக, பங்குசந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில், சீனா இந்தியாவை அணி சேர்க்க அழைத்தது. அமெரிக்காவை எதிர்க்க இரண்டு பெரிய பொருளாதார சக்திகள் ஒன்றாகும் சூழல் உருவானது. இந்த கூட்டணியின் தாக்கத்தை உணர்ந்த ட்ரம்ப், தனது முடிவை திரும்பப் பெற்றார். இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார். ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க முடியாது என அவர் உறுதி தெரிவித்தார். சீனாவுடன் இந்தியா கைகோர்க்கும் என்ற பயத்தால் தான் டிரம்ப் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைமை சற்று நிம்மதி அடைந்தது. இந்திய பங்குசந்தையும் மீள இயல்பு நிலையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சீனாவுக்கு விதிக்கப்பட்ட கடுமையான வரி, இந்தியாவிலும் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கான வரியையும் குறைக்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்