மகாலட்சுமித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுப்பதாகக் கூறி மக்களிடம், வாக்காளர்களிடம் கையெழுத்து பெறுகிறார்கள், இதற்காக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரைதகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். விருதுநகர் எங்களது சொந்த மண், இந்த மண்ணின் பிரச்சினைகள் எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி மகாலட்சுமித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுப்பதாகக் கூறி மக்களிடம் வாக்காளர்களிடம் கையெழுத்து பெறுகிறார்கள் என்றும் ஒரு வேட்பாளர் எப்படி செயல்பட வேண்டும் என்பது தெரியவில்லை என்றும் இது முற்றிலுமாக தேர்தல் விதிமீறல் என்றும் தெரிவித்தார்.
இந்த ஒரு விஷயத்துக்காகவே மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பிரேமலதா கூறினார். இது தொடர்பாக திருமங்கலம், விருதுநகர், சாத்தூர் ஆகிய 3 இடங்களில் காவல் துறையிலும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளதாகவும். தலைமை தேர்தல் அலுவலரிடமும், டெல்லிக்கும் புகார் அனுப்பி உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
வேட்பாளரே வாக்காளரிடம் கொடுத்து கையெழுத்துப் பெற்றால், அது தேர்தல் விதிமுறை மீறல்தான் என்றும் மற்ற இடங்களிலும் இதுபோன்று காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்தால் அதுவும் விதிமீறல்தான் என்றும் சட்ட ரீதியாக அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான 46 தேர்தல் வாக்குறுதிகளை பிரமலதாவும், விஜய பிரபாகரனும் வெளியிட்டனர்.