வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகவும், அருணகிரிநாதருக்கு முருகன் அருள் பெற்ற இடமாகவும் புகழ் பெற்றது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும் திட்டம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, அவை நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் கடந்த 14-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. தொடர்ந்து யஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்டவை நடந்தன.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. பின்னர், காலை 9.15 மணிக்கு ராஜகோபுரங்கள், விமானங்கள், மூலஸ்தானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
மதியம் 12.15 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.