தமிழ் புத்தாண்டு 2023: மகிமை அளிக்கும் சோபகிருது ஆண்டு! - வழிபாடு முறைகள்!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (11:11 IST)
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது காலம் காலமாக தமிழர் மரபாக உள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் ஸ்ரீசோபகிருது ஆண்டு தொடங்குகிறது.

தமிழ் புத்தாண்டு என்றால் என்ன?

தமிழ் புத்தாண்டு பன்நெடுங்காலமாக தமிழர் பண்பாட்டில் முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது. 60 தமிழ் வருடங்களும் கணிக்கப்பட்டு ஒவ்வொரு சித்திரையிலும் ஒவ்வொரு ஆண்டாக தொடர்ந்து வருகிறது. இந்த 60 ஆண்டுகளும் பிறந்ததற்கு பின்னே புராண கதையும் உள்ளது.

தமிழ் ஆண்டுகள் புராண கதை:

நாராயண பக்தரான நாரத முனி கிருஷ்ணர் மேல் கொண்ட காதலால் பெண்ணாக மாறி அவருடன் வாழ்ந்து பெற்ற 60 குழந்தைகளே இந்த 60 தமிழ் வருடங்கள் என புராணங்கள் கூறுகின்றன.

தமிழ் பண்பாட்டில் சூரியன் முக்கியமான பங்கு வகிக்கிறது. தை பொங்கல் கூட அறுவடைக்கு காரணகர்த்தாவாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகதான் கொண்டாடப்படுகிறது. அப்படியாக தமிழின் முதல் மாதமான சித்திரை சூரியன் மத்திய ரேகையில் வீற்றிருக்கும் மாதமாகும். தமிழ் ஆண்டை சூரியனிடமிருந்தே மக்கள் தொடங்குகின்றனர்.

சோபகிருது ஆண்டின் சிறப்பு:

இந்த ஆண்டு 2023 சித்திரையில் சுபகிருது ஆண்டு முடிவுக்கு வந்து ஸ்ரீசோபகிருது ஆண்டு தொடங்குகிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் தனித்த குணாதிசயம் உண்டு. சோபகிருது வருடத்தில் பிறப்பவர்கள் சகல வித மேன்மைகளை பெற்றவர்களாகவும், சாமர்த்தியசாலியாகவும் இருப்பார்கள்.

தமிழ் புத்தாண்டு பூஜை முறை:

இந்த ஆண்டு சோபகிருது புத்தாண்டு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் தொடங்குகிறது. புத்தாண்டிற்கு முதல் நாளே வீடு முழுவதும் சுத்தம் செய்து, தரையை நன்றாக கழுவி விட வேண்டும். பூஜையறை பொருட்களை நன்றாக சுத்தம் செய்து பூஜைக்கு ஆயத்தமாக வைக்க வேண்டும்.

காலையே எழுந்து எண்ணெய் குளித்து தூய உடையணிந்து பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் புத்தாண்டு நாளில் அசைவம் தவிர்த்து சாம்பார், வடை, பாயாசம் சமைத்து சாமிக்கு படைக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் காலை முதல் உணவு எடுக்காமல் விரதம் கடைப்பிடிக்கலாம். சித்திரை மாதம் சித்திர குப்தனின் மாதம் என்பதால் பெண்கள் பலரும் சித்திர குப்தனுக்கு விரதம் இருப்பது விசேஷம்.

தாம்பூல தட்டில் மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகளுடன் மற்ற பழங்களையும் வைத்து, வெற்றிலை, பாக்கு வைத்து அதில் சூடம் ஏற்றி கடவுள் படங்களுக்கு காட்டி பின்னர் திருநீர் அணிந்து கொள்ளல் வேண்டும்.

அருகே உள்ள எந்த கடவுளர் திருக்கோவிலுக்கும் மாலையில் சென்று வழிபடுவது அன்றைய நாளின் தீர்க்கத்தை ஆண்டு முழுவதிற்கும் நீட்டிக்கும்.

தமிழ் புத்தாண்டு அன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கல பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பது நல்லது. அஷ்ட லட்சுமிகளை குறிக்கும் தனம், தானியம், மஞ்சள், கற்கண்டு உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் ஆண்டு முழுவதும் சுபிட்சம் கிடைக்கும். வீட்டில் செல்வம் பெருகும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்