முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானை பற்றிய அரிய தகவல்கள் !!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (16:24 IST)
உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் “ஓம்” என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான்.


முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மகாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு.

ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத வழிபாட்டு முறைகளில் "காணாபத்தியம்' எனப்படும் கணபதி வழிபாடே முதன்மை வகிக்கின்றது. விநாயகர் தோன்றிய வரலாற்றினையும், நரமுக கணபதியான அவர் கஜமுக கணபதியான வரலாற்றினையும் புராணங்கள் பல்வேறுவிதமாக விவரிக்கின்றன. சுருங்கக்கூறின், அற்புதங்கள் பல நிறைந்தது.

கணபதியின் அவதாரம். ஆதியிலும் அந்தத்திலும் விளங்கியதால் ஆதியந்தமற்ற பரபிரம்ஹ ஸ்வரூபமாக இவரை, "ஜ்யேஷ்டராஜன்' (மூத்தவர்) என்று வேதங்கள் அழைக்கின்றன. கணங்களுக்கெல்லாம் தலைவரானதால் கணபதி எனவும் மேலான தலைவர் என்பதால் விநாயகர் எனவும், தடைகளை நீக்குவதால் விக்னேஸ்வரர் எனவும் பல பெயர்கள் உடையவரானார்.

சிவபெருமானுடைய பிள்ளையானதால் மரியாதையாகப் பிள்ளையார் என்று கூறுகின்றோம். விநாயகரின் திரு உருவத்தில் பல தெய்வங்கள் உறைகின்றனர். அவரது நாபி பிரம்ம சொரூபத்தையும், முகம் விஷ்ணு சொரூபத்தையும், இடப்பாகம் சக்தி வடிவையும், வலப்பாகம் சூரியனையும், முக்கண்கள் சிவசொரூபத்தையும் குறிக்கின்றன.

ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் விதமாக மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ வடிவத்தில் பிரம்ம சுவரூபத்தையும் இணைத்துக்கொண்டு அற்புதமாக அவர் காட்சி தருகின்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்