சிவபெருமானுக்கு சாப விமோச்சனம் அளித்த ஸ்தலம்! தோஷங்களை போக்கும் அங்காளம்மன் கோவில்..!

Raj Kumar

வியாழன், 23 மே 2024 (09:34 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் மேல் மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவில் அம்மன் கோவில்களிலேயே சக்தி வாய்ந்த கோவிலாக பார்க்கப்படுகிறது. தோஷங்களை நிவர்த்தி செய்வது, கேட்ட வரத்தை கொடுப்பது என மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக அங்காளம்மன் கோவில் உள்ளது.



கிட்டத்தட்ட 3000 வருடங்கள் பழமையான கோவில் இது என கூறப்படுகிறது.

ஸ்தல வரலாறு:

முந்தைய காலங்களில் சிவப்பெருமானுக்கு மொத்தம் ஐந்து தலைகள் இருந்தன. பிரம்மனுக்கும் கூட ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவப்பெருமானும், பிரம்மனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தனர்.

இந்த நிலையில் ஒருமுறை கைலாயத்திற்கு வந்த பிரம்மனை சிவப்பெருமான் என நினைத்த பார்வதி அவரை அமர வைத்து பாத பூசைகள் செய்தார். அந்த சமயத்தில் சிவப்பெருமான் அங்கு வந்தார். அப்போதுதான் பார்வதி அவர் செய்த தவறை உணர்ந்தார்.
உடனே சிவப்பெருமானிடம் சென்ற பார்வதி “அந்த ஆள் பார்ப்பதற்கு உங்களை போலவே இருக்கிறான் சுவாமி. மேலும் நான் அவனுக்கு பாத பூசை செய்தப்போது அவன் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை” என பார்வதி தேவி முறையிட இதனால் கோபமடைந்த சிவப்பெருமான் பிரம்மனின் ஒரு தலையை வெட்டி எடுக்கிறார்.

இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொள்ள, வெட்டப்பட்ட பிரம்மனின் தலையோ சிவப்பெருமானின் கைகளில் ஒட்டிக்கொள்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சரஸ்வதி தேவி தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கும் விதமாக சிவப்பெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் பூமியில் மயானங்களில் அலைந்து திரிவீர்கள் என சாபமிடுகிறார்.



இந்த நிலையில் சாப விமோச்சனம் கேட்டு திருமாலிடம் செல்கிறார் பார்வதி தேவி. அப்போது திருமால் சிவப்பெருமானுடன் சென்று தண்டகாருண்யத்தை அடைந்து அங்குள்ள மயானத்தின் அருகில் தீர்த்தமுண்டாக்குமாறு கூறுகிறார்.

அதன்படி சிவப்பெருமானும் தீர்த்தமுண்டாக்கி அதில் குளித்து சாப விமோச்சனம் பெறுகிறார். ஆனால் பிரம்மனின் தலை அடுத்து பார்வதியை பிடித்துகொள்கிறது. அந்த கபாலம் இருக்கும் வரை பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழியில்லை. எனவே கோபமடைந்த பார்வதி அந்த தலையை மிதித்து கபால மாலையாக்கி கழுத்தில் அணிகிறார்.
அந்த திருவுருவமே அங்காளம்மனாக மாறியது.

தோஷம் போக்கும் அங்காளம்மன்:

அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு 11 மணிக்கு நடைபெறும். இந்த ஊஞ்சல் உற்சவத்தை கண்டால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்