ராமநாதபுரம் மாவட்டத்தின் புகழ்பெற்ற திருத்தலமான திரு உத்தரகோசமங்கை பகுதியில் மங்களநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல கோடி மதிப்பிலான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதனை ஒட்டி, இன்று (4-ம் தேதி) கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, கடந்த 31-ம் தேதியிலிருந்து யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. ஐந்து கால யாக பூஜைகள் நேற்று நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை சிகர நிகழ்வாக கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை கோவில் கதவுகள் திறக்கப்பட்டு, மூலவர் மங்களநாதர் மற்றும் மங்களேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், காலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாக வாசனம் மற்றும் ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
காலை 9 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து புனித நீர் நிரப்பிய கும்பங்களை எடுத்து வலம் வந்தனர். சரியாக 9.30 மணிக்கு கோவில் ராஜகோபுரம், விமான கோபுரம் மற்றும் மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைக் காண திரளான பக்தர்கள் கூடினார்கள். அவர்கள் "சிவனே போற்றி" என்று முழங்கினர். பின்னர், புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டு, அவர்களும் ஆனந்தபூர்வமாக தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனடியாரின் அருளைப் பெற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வடக்கு வாசல் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 1-ம் தேதி மரகத நடராஜரின் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு தரிசனத்திற்காக அருள்பாலித்தார். இவரைப் பார்க்க, நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.