சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வதால் சந்திர பலம் பெறமுடியுமா...?

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:08 IST)
'பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று சொல்வதற்கேற்ப வடிவமைக்கவும், வணங்கவும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும்  கீர்த்தியைக் கொண்ட முழுமுதற்கடவுள் இவர். இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம்.


'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நியதி.

அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.

''ஸ்ரீகிருஷ்ணர், பிரம்மா, புருசுண்டி முனிவர், செவ்வாய் ஆகியோர் இந்தச் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு வரம் பெற்றார்கள்’ என்கின்றன ஞான நூல்கள். சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.  பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்