அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை! வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்!

Prasanth Karthick
புதன், 24 ஜனவரி 2024 (11:54 IST)
தைப்பூச நாளான நாளை வடலூரில் சத்திய ஞான சபையில் வள்ளலாரின் ஜோதி தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் வடலூர் நோக்கி சென்று வருகின்றனர்.



’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என பாடியவர் வள்ளலார். உலக உயிர்களிடையே அன்பையும், அமைதியையும் ஏற்படுத்தும் நோக்கில் 1867ல் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையை வள்ளலார் அடிகளார் நிறுவினார்.

தைப்பூச நாளிலே இங்கு கொண்டாடப்படும் ஜோதி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. இறைவன் ஜோதி வடிவாய் உள்ளார் என எடுத்துரைத்த வள்ளலாரை இந்த ஜோதி தரிசனத்தில் மக்கள் தரிசிக்கின்றனர். சத்திய ஞான சபையிலே கண்ணாடியை மறைக்கும் வண்ணம் 7 நிறங்களை கொண்ட 7 திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளது.

தைப்பூச தினத்தில் மட்டுமே 7 திரைகளும் விலக்கப்பட்டு ஜோதி தரிசனத்தை காண இயலும். இந்த 7 வண்ண திரைகளும் அசுத்த மாயாசக்தி, சுத்த மாயாசக்தி, கிரியா சக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதிசக்தி என 7 வகையான சக்திகளை குறிப்பதாகும்.
சத்தியஞான சபையிலே ஆண்டு முழுவதுமே பசித்த வயிறுக்கு உணவிட அன்னதான தர்ம சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தர்மசாலையின் அடுப்பு என்றுமே அணைந்தது இல்லை என்றும், பசித்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் தினம் தினம் ஆகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் வடலூர் சத்தியஞான சபையின் சிறப்புகளில் ஒன்றாகும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்