தக்காளியில் காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்தும் முறைகள்…

Webdunia
தக்காளி முக்கிய காய்கறி பயிர்களில் ஒன்றாகும். இது காய்கறிப் பயிர்களில் இரண்டாம் இடம் வகிக்கிறது.  உலகமெங்கிலும் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் 4.5 லட்சம் ஹெக்டேரில் தக்காளி பயிரிடப்படுகிறது.  


 


தக்காளியில் விட்டமின் ஏ.பி.சி மற்றும் தாதுப்பொருள்கள் இருக்கின்றது. தக்காளியிலிருந்து சூப், ஊறுகாய்,  போன்ற பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. தக்காளி பயிரை ஏறக்குறைய 150 வகையான பூச்சிகள் தாக்கி  சேதப்படுத்துகிறது. இதனால் மகசூல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இந்த கட்டுரையில் தக்காளி பயிரில் காய்  துளைப்பான் ஏற்படுத்தும் சேதம் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.
 
காய்த்துளைப்பான் ஹெலிகோவொர்பா ஆர்மிஜீரா: 
 
இது தக்காளிப் பயிரில் அதிக சேதம் விளைவிக்கும் பூச்சி ஆகும். இது பருத்தி, பயறு வகைகள், சூரியகாந்தி,  வெண்டை, மிளகாய், மக்காச்சோளம் முதலிய பலவகையான பயிர்களையும் தாக்குகிறது. 
 
தாக்குதலின் அறிகுறிகள்: 
 
தாக்கப்பட்ட காய்களில் வட்ட வடிவில் துவாரங்கள் காணப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் முதல்  நிலைப் புழுவானது முட்டை ஓட்டையே உண்ணும். பிறகு இலைகளைச் சாப்பிடும். மூன்றாம் நிலைப் புழுக்கள்  காய்களைத் துளைத்து உட்பகுதியினை உண்ணும். இப்புழுவானது தலையையும், உடலின் முன்பகுதியையும் மட்டும் காயினுள் நுழைத்து உண்பதால் மீதி உடற்பகுதி காய்க்கு வெளியே காணப்படும். வெளியே தள்ளப்பட்ட  கழிவுப் பொருட்கள் காயின் மேல் காணப்படும். ஒரு புழு 2 முதல் 8 காய்களைத் தாக்கும். 
 
வாழ்க்கை சுழற்சி: 
 
தாய்ப்பூச்சியின் முன் இறக்கைகள் செம்பழுப்பாகவும், வெண்மையான பின் இறக்கைகளின் ஓரம் கருப்பாகவும்  காணப்படும். தாய்ப்பூச்சி முட்டைகளை தனித் தனியாக இலைகள், பிஞ்சுக் காய்கள் ஆகியவற்றில் இடும்.  முட்டை பொறிக்கும் காலம் 2 முதல் 4 நாட்கள் ஆகும். இளம் புழுக்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில்  இருக்கும். ஒரு புழுவின் வளர்ச்சிப் பருவம் 15 முதல் 24 நாட்கள் ஆகும். வளர்ந்த புழு சுமார் 35 முதல் 45 மி,மீ நீளமாகவும், பச்சை நிறமாகவும் இருக்கும். வளர்ந்த புழு மண்ணிற்குள் சென்று கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழு பருவம் 10 முதல் 14 நாட்கள் ஆகும். முட்டை பருவத்திலிருந்து அந்தப்பூச்சி வெளிவர 25 முதல் 30  நாட்கள் ஆகும். 
 
கட்டுப்படுத்தும் முறைகள்: 
 
நிலத்தை ஆழ உழுவதால் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன. காய்த்துளைப்பான் எதிர்ப்புத் திறனுள்ள ரூபாலி,  ரோமன், பூசா ரெட்பிளம் போன்ற இரகங்களைப் பயிரிட வேண்டும். தாக்கப்பட்ட காய்களையும், பழங்களையும்,  புழுக்களையும் சேகரித்து அழிக்க வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில்  அமைக்க வேண்டும். பொருளாதார சேத நிலையைப் பொருத்து பூ பூக்கும் பருவத்தில் டிரைக்கோகிரம்மா  கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஹெக்டேருக்கு 50,000 என்ற அளவில் இடவேண்டும். கிரைசோபா இறை  விழுங்கிப் பூச்சியை 50,000 முட்டைகள் அல்லது 10,000 புழுக்கள் என்ற அளவில் விடவேண்டும்.
 
ஹெலிகோவொர்பா ஆர்மிஜீரா என். பி.வி.வைரஸ் கலவை 1.5X 1012 PGOS ஒரு ஹெக்டேர் என்ற அளவில்  மாலை நேரத்தில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 2 கிராம் ஒரு லிட்டர்  என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். கார்பாரில் நனையும் தூள் 2 கிராம் ஒரு லிட்டர் என்ற அளவில்  கலந்து தெளிக்க வேண்டும்.  
 
புகையிலைப் புழு ஸ்போடாப்டிரா லிட்டுரா: 
 
புழுக்கள் செடியின் இலைகள் மற்றும் தண்டுகளை கடித்து உண்ணும். வளர்ந்த புழுக்கள் பழங்களை உண்ணும்.  பகல் நேரத்தில் மண்கட்டிகளின் அடியில் பதுங்கி இருக்கும். மாலை நேரங்களில் வெளிவரும் புழுக்கள் கூட்டம்,  கூட்டமாக சென்று இலையினைக் கடித்து உண்பதால் சேதம் ஏற் படுத்துகிறது. 
 
வாழ்க்கை சுழற்சி: 
 
பெண் அந்துப்பூச்சி உருண்டை வடிவமான முட்டைகளை குவியலாக இலையின் அடிப்பரப்பில் இடும்.  முட்டையின் மேற்பரப்பை மஞ்சள் நிற கம்பளி போன்ற ரோமங்களினால் மூடிவிடும். இளம் புழுக்கள் பச்சை  நிறமாகக் காணப்படும். பழுப்பு அந்துப்பூச்சிகளின் முன் இறக்கைகளில், கருப்பு மற்றும் மஞ்சள் நிற கோடுகள்  இருக்கும். பின் இறக்கைகள் வெண்மையாக இருக்கும். இப்பூச்சியின் வளர்ச்சிக் காலம் சுமார் 20 முதல் 25  நாட்கள் ஆகும். 
 
கட்டுப்படுத்தும் முறைகள்: 
 
நிலத்தை ஆழ உழுது கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். முட்டைகளையும், இளம் புழுக்களையும்  இலைகளோடு சேகரித்து அழிக்க வேண்டும். விளக்குப்பொறி அமைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து  அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி 4 ஒரு ஏக்கர் அளவில் வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.  வயல்களின் ஓரங்களில் ஆமணக்குச் செடிகளை 50 ஒரு ஏக்கர் என்ற அளவில் பயிர் செய்ய வேண்டும்.  ஸ்போடாப்டிரா லிட்டுரா என்.பி.வி. வைரஸ் கலவை 1.5X1012 PGOS ஒரு ஹெக்டேர் என்ற அளவில் மாலை நேரத்தில் கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கார்பாரில் நனையும் தூள் 2 கிராம் ஒரு லிட்டர் என்ற  அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 
 
வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த நச்சு உணவு (நெல், தவிடு 12.5 கிலோ + வெல்லம் 1.25 கிலோ+கார்பாரில் 50  1..25 கிலோ+தண்ணீர் ஒரு ஹெக்டேருக்கு என்ற அளவில் தயாரித்து சிறு சிறு உருண்டைகளாக்கி மாலையில்  வயலில் வைக்கவும். வீட்டில் கோழி, பூனை, நாய் முதலிய வளர்ப்புப் பிராணிகள் இருந்தால் நச்சு உணவைத்  தவிர்க்கவும். மேற்கூறிய பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி தக்காளியில் அதிக மகசூலை பெறமுடியும்  என்பது உறுதி.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்