உடல் எடையைக் குறைப்பதிலும், ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் காலை உணவுக்கு முன் அருந்தும் பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் சீரக நீர், தனியா நீர் ஆகிய இரண்டுமே உடல்நலனுக்கு நன்மை பயப்பவை. அவற்றில் எது சிறந்தது எனப் பார்ப்போம்.
சீரக நீரின் நன்மைகள்
குறைந்த கலோரிகள்: ஒரு லிட்டர் சீரக நீரில் வெறும் 7 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும். இது கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
செரிமானம்: சீரகத்தில் உள்ள செரிமான நொதிகள், செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் வயிறு வீக்கத்தைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.
தனியா (கொத்தமல்லி) நீரின் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி: தனியா நீரில் உள்ள வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இவை நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
ஹார்மோன் சமநிலை: நாளம் இல்லா சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையைச் சரிசெய்ய தனியா நீர் உதவுகிறது. இது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுகிறது, தைராய்டு ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மேம்படுத்துகிறது.
எதை தேர்வு செய்வது சிறந்தது?
சீரக நீர் மற்றும் தனியா நீர் ஆகிய இரண்டிற்கும் தனித்துவமான நன்மைகள் உண்டு. எனவே, எது சிறந்தது என்பது அவரவர் தனிப்பட்ட தேவையைப் பொறுத்தது.
தயாரிக்கும் முறை:
சீரக நீர்: ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம்.
தனியா நீர்: ஒரு டேபிள்ஸ்பூன் தனியாவை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம்.