ஈசல்கள், கரையான் புற்றுகளில் இருந்து உருவாகி, உலகின் சில பகுதிகளில் சத்தான உணவாக கருதப்படுகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவில், மழைக்காலம் தொடங்கும் நேரத்தில், மக்கள் விளக்குகளை பயன்படுத்தி, அதன் கீழே தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வைத்து ஈசல்களை பிடிக்கின்றனர். பின்னர், அவற்றின் இறக்கைகளை நீக்கி, வெயிலில் உலர்த்தி, வறுத்து பொடியாக்கி சேமித்து வைக்கின்றனர்.
இந்த ஈசல் பொடியில், வேறு எந்த இறைச்சியிலும் இல்லாத அளவுக்கு அதிக புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்திருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஈசல்களுக்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளன. மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற பாதிப்புகளை ஈசல்கள் நீக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு, ஈசலை எண்ணெயில் காய்ச்சிப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.