அல்சரை ஏற்படுத்தும் காரணிகளும், வழிமுறைகளும்

Webdunia
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை அல்சர் என்கிறோம்.


 
 
காலை உணவுகளை தவிர்ப்பது, காரம் நிறைந்த உணவு பொருள்களை எடுத்து கொள்வது, புளிப்பு மற்றும் மசாலா கலந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது, சூடாகச் சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் ஆகியவை இரைப்பைப் புண்ணிற்கு வழிவகை செய்கிறது.
 
சுகாதாரமற்ற குடிநீர், உணவுகள், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது. மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் காரணமாக அமைகிறது.
 
தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிக அலவு ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால், இந்த அமிலம் இரைப்பையின் மியூகஸ் படலத்தைத் அரித்து இதனால் இரைப்பைப் புண் உண்டாகும்.
 
அல்சருக்கான அறிகுறிகள்: நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதோடு, அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். 
 
வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. சிலருக்கு உணவைச் சாப்பிட்ட உடனேயே மலம் கழிப்பதுண்டு. பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.
 
அல்சரை குணப்படுத்த சில வழிமுறைகளை கையாள்வதன் மூலம்  சிசெய்ய முடியும். மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
 
ஆவியில் வேகவைத்த உணவு வகைகளை உட்கொள்வதோடு தானிய வகைகளையும் எடுத்து கொள்ள வேண்டும். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்தல் நல்லது. இனிப்புப் பண்டங்களையும், அதிக புளிப்பு நிரைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகளில் முட்டைகோஸ் போன்ற உணவுகள் இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த உதவும்.
 
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா, அலர்ஜி நோய்களுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. இதுவும்அல்சர் ஏற்பட ஒரு காரணியாக அமையும்.
 
அல்சர் உள்ளவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பது நல்ல பலன் அளிக்கும். மணத்தக்காளி கீரையை அடிக்கடி சேர்த்து கொள்வதோடு, கொப்பரையை வெறும்வயிற்றில் மென்று சாப்பிடுவதால் இரைப்பைப் புண் குணமாகும். தியானம் செய்வது நல்லது, இரைப்பைக்கு வலு சேர்க்கும் யோகாசனங்களும் நல்ல பயனைத் தரும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்