அமெரிக்க வேதியியல் சங்கம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, சமைக்கும்போது கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து அரிசியை சமைப்பது, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும் எனத் தெரியவந்துள்ளது. இந்த செயல்முறை, உடல் உறிஞ்சும் கலோரிகளின் எண்ணிக்கையையும் கணிசமாக குறைப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த முறையில் அரிசியை சமைப்பதால், அரிசியில் உள்ள மாவுச்சத்து உடல் உறிஞ்சப்படுவதை திறம்படத் தடுக்க முடியும். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மாவுச்சத்து உடனடியாக சர்க்கரையாக மாற்றப்படுவதை தடுக்கிறது. மேலும், இது அரிசியின் சுவையில் எந்த எதிர்மறை மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், மாறாக, உண்பதற்கு சுவையாகவும், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாகவும் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆச்சரியப்படும் வகையில், அமெரிக்க வேதியியல் சங்கம் இந்த முழு ஆய்வு அறிக்கையையும் பொதுவெளியில் சமர்ப்பிக்கவில்லை. இதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதேசமயம், வேறு சில ஆய்வாளர்கள் இந்த முறையில் சமைக்கப்பட்ட அரிசியிலும் கலோரிகள் இருக்கும் என்று கூறியுள்ளனர். இருப்பினும், இந்த முறை உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்பது பல நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.