நல்ல தூக்கம் பெற ஐந்து வழிகள்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (07:00 IST)
ஒரு மனிதனுக்கு உழைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் தூக்கம். தூக்கம் இல்லாததால் பல உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இரவு தூக்கம் மிகவும் முக்கியம்.



 



இன்று அதிக பணத்திற்காக பலர் இரவு ஷிப்ட்களில் பணிபுரிகின்றனர். ஆனால் இயற்கைக்கு மாறாக இரவில் தூங்காமல் விழித்திருப்பது பல்வேறு உடல் மற்றும் மன கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் நாளடைவில் புரிந்து கொள்வார்கள்

சரி இனி நல்ல தூக்கம் என்றால் என்ன என்று பார்ப்போமா?

1. இரவு தூக்கம் மிகவும் முக்கியம். பணியில் இருப்பவர்களுக்கும் பகலில் தூங்குபவர்களுக்கும் இரவில் தூக்கம் வராது. பெரும்பாலும் பகல் தூக்கத்தை தவிர்த்தாலே இரவில் நன்றாக தூங்கலாம்.

2. நல்ல தூக்கத்திற்கு நல்ல சுகாதாரமான படுக்கை அறை தேவை. குறிப்பாக படுக்கை விரிப்புகள், மிதமான தடிமனில் பருத்தி தலையணை ஆகியவை இருந்தால் தூக்கமும் நன்றாக வரும், தூக்கம் இடையில் கலையாமலும் இருக்கும்

3. இரவு உணவு அதிகமாக சாப்பிட கூடாது. அரை வயிற்றுக்கு அதே நேரம் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும். குறிப்பாக தூங்குவதற்கு முன்னர் காபி, டீ, சாக்லேட் அறவே வேண்டாம். இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும். மூளையைப் பாதிக்கும்.

4. தூங்குவதற்கு முன்னர் மிக முக்கியமாக அனைவரும் செய்யும் தவறு டிவி, கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதுதான். இதிலிருந்து வெளீப்படும் நீலவண்ண ஒளி தூக்கத்தை பாதிக்கும். எனவே தூங்குவதற்கு அரை மணிக்கு முன்னர் இவற்றை பார்ப்பதை தவிர்ப்பது நலம்

5. தூங்கும்போது கழுத்தை சரியான கோணத்தில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டியது அவசியம். படுத்துக் கொண்டு டி.வி பார்க்கக் கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும். படுக்கை அறையில் எந்த காரணத்தை கொண்டு டிவியை  வைக்க வேண்டாம்.
அடுத்த கட்டுரையில்