நன்மை தீமை என்றுமென்றும் வேண்டு மிந்த உலகத்தில்… துன்ப மில்லா வாழ்க்கையென்றும் சலிப்பை ஏற்ப டுத்திடுமே! அன்பின் காணும் வாழ்க்கையதில் தோன்றா மேன்மைப் பூத்திடுமே காணு மிந்த உலகினிலே அற்பு தமாய் தோன்றொடுமோர் இன்ப மென்றால் அடுத்தவர்க்கு உதவும் தூய நல்லுள்ளமே !
நாமெதுவாக நினைக்கின்றோமோ அதாகவே நம்மால் ஆகமுடியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் நமக்கொரு துன்பம் இனிவாராது இனி என்னாளும் பொன்னாளே என்று நாம் உளமாற நினைத்து இப்புத்தாண்டான 2021-ஐ மகிழ்சிப்பூச்செண்டு கொடுத்து மனதார வரவேற்போம்!
ஆயிரம்கோடி இன்பம் வரட்டும் அதுமட்டுமே இந்த ஒற்றைவாழ்வில் நமக்குக்கிடைத்துவந்தால் நம்மால் எப்படி வாழ்க்கையில் நன்மை தீமைகள், இன்ப துன்பங்கள் பற்றிய வாழ்க்கையனுபவங்களைப்பெற முடியும்? என்று நினைத்துப்பார்த்து நடந்ததெல்லாம் நன்மைக்கென்றே அனுதினமும் நினைக்கின்ற மனவுறிதியைப் பெறுவோம்.
அகிலத்தில் மகிழ்ச்சிவாசல் அன்பின் வழிப்பாதையில் உள்ளதை புத்தன், காந்தி முதற்கொண்டு எத்தனையோ முன்னோர்கள் தம் வாழ்க்கையினூடாகச் சொல்லிவிட்டுப்போயுள்ளதை நாம் மறுதலிக்காமல் ஏற்றுக்கொண்டாகவேண்டிய தருணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம்.
இன்று விதைப்பது நாளை விருட்சத்தின் நற்கனிகளைக் கொடுக்கப்போவதையெண்ணி நம் செயல்கள் விசாலமாகட்டும். மனிதர்களின் ஒற்றுமையே அணுவிஞ்ஞாணி ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் சொன்னதுபோல் நம் தேசத்தின் வல்லரசாகக் கட்டியெழுப் புவதற்கானவொரு அன்புப்பாலமாகட்டும்.
எத்தனையோ முடிவில்லாத தேடல்களில் நம் புவியின் ஆச்சர்யங்கள் மூலைமுடுக்கெல்லாம் ஒளிந்துகொண்டுள்ளது. இதைத் தேடிக்கொண்டு பயணிக்கும் ஆராய்ச்சியாளர்கள், பூமியின் அச்சாரமாகவுள்ள வராலாற்றாய்வாளர்கள், நாகரீகத்தில் தொட்டிலையும் முந்தைய காலத்தில் வாழ்ந்த விலங்கு, பறவை, செடி, மரங்கள் , மனிதர்களைப் பற்றிய மரபுக்கூறுகளையும் உண்மைத்தன்மைகளையும் மெய்வருத்தம் பாராது எடுத்துரைத்து, காலத்தின் பின்னோட்டத்தைப் பற்றி நம் கண்ணோட்டத்திற்கு வைக்கின்ற அகழ்வாராய்ச்சியாளர்கள், இப்புதிய உருமாறிய கொரோனாவைரஸ் தொற்றுமுதல் ஏறக்குறைய குழந்தையின் பிறப்பு முதல் ஏனைய கொடிய நோய்களைத்தீர்த்துவைக்கும் நம் கண்ணால்காணுகின்ற தெய்வாதீன கடமையை இயல்பாய்ச் செய்து மனிதத்தை புத்தெழுச்சியூட்டித் துளிர்க்கச்செய்யும் மருத்துவர்கள்; அவர்களுக்கு உதவி சகமனிதத்தைத் தனது தூயசேவையால் துளிர்விடச்செய்யும் செவிலியர்கள்; சமாதானத்தையும் நீதியையும் நிலைநிறுத்த அந்த நீதிதேவதையின் புதல்வர்களாய் வீற்றிருந்து தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகள், சமூகஒழுக்கத்தைக் காப்பாற்றும் தார்மீகப் பணியில் தங்களை இரவுபகலாக ஓய்வின்றி ஒப்படைத்துள்ள காவலர்கள்; கலைகளையும் கலாச்சாராங்களையும் காலங்கடந்தும் விட்டேத்தியாய்ப்போய்விடாதபடி அதைத் தமது உயிராத்துமாவைப்போல் எழுத்துகளால் கட்டிப்பிடித்துச் சமூகவாழ்வியலையும், பண்பாட்டுக்கூறுகளையும், நாகரீகத் தொடர்ச்சியையும், தேசத்தின் வளர்ச்சியும், இனத்தின் பெருமையும், மக்களின் பரிமாணத்தையும், தாய்மொழியின்பெருமையையும் எக்கா லத்திற்கும் எடுத்துரைக்கும் தலையாயப் பணியைச் செய்துவரும் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆகப்பெரும் ஊடகமென எல்லோராலும் ஆராதிக்கப்பட்டு இன்று அகிலத்தையே ஆட்டிப்படைத்து வரும் சினிமா கலைஞர்கள், மனிதனின் ஆகப்பெரும் சொத்தெனக் கருதும் அறிவினைத் தாம் பெற்றுக்கொண்டதைத் தங்களது மாணவர்களுக்குப் பகிந்தளித்து, நாட்டின் தூண்களாய் நிலைநிறுத்தவே கற்பித்தலைத் தம் தலையில்தூக்கிப் பொறுப்புத்தடியால் மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கும், வாழும்வீட்டை வடிவமைக்கு பொறியாளர்கள்; அதை அரும்பாடுபட்டு நேர்த்தியாய்க் கட்டிமுடிக்கும் கட்டிடத்தொழிலாளர்கள்; அன்றாடமும் நாம் வாழும் ஊரினைச் சுத்தம்செய்து பராமரிக்கும் தூய்மைப்பணியாளர்கள்; மனிதனின் நவயுகத்தைக் கட்டிக்காட்டும் கலையைக்கைப்பிடித்துள்ள தையல்கலைஞர்கள், அரசு இயந்திரத்தைத் தன் பதவியால் அலங்கரிக்கின்ற ஆட்சியாளர்கள்; அவ்வியந்திரத்தைச் சுழற்றுகின்ற அரசு அதிகாரிகள்; புற்றீசல்போல் முளைத்துள்ள எண்ணிக்கையில்லா அரசியல்கட்சித் தலைவர்கள் - அவர்களின் நம்பிக்கைக்குரிய செயல்வீரர்கள், ஒட்டுமொத்த உலகிற்கும் தங்கள் வியர்வை மற்றும் குருதியைச் சிந்திச் சேற்றிலிறங்கிப்பாடுபட்டுச் சோறுபோடும் தன்னலமில்லாத விவசாயிகள்; அப்பொருட்களைக் கொள்முதல் செய்து வியாபரம் செய்யும் வர்த்தகவர்கள் வணிகர்கள் என உலகில் ஒட்டுமொத்தமுள்ள அத்துணைப்பேரின் தயவால் இப்பூமித்தன்னை நொடிதோறும் சிலிர்த்துக்கொண்டு வானவில்போல் புதுமைவண்ணம் பூசிக்கொண்டு சுழன்றுவருகிறது. அதனுதவியால் நாமும்தான்.
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தன் உள்ளத்தனையது உயர்வு எம் பேராச்சான் வள்ளுவரின் கூற்றுப்போல் இவர்களின் நல்லுள்ளத்தால் சிந்தனைவளத்தால் மீண்டும் நமது எழுசியைக் கட்டியெழுப்புவோம் என்று உறுதிகூறுவோம்…
வாழ்க்கை நம்மை கைவிடாது; நாமும் அதைக் கைவிடாதிருப்போனால் நம்மைச்சுற்றி நேர்மறையின் அலைகளே குழுமும்; நம் வெற்றியிலன்பதக்கத்தை யாராலும் தட்டிப்பறிக்க முடியாத உயரத்திற்கு சென்று நம்மையும் அது உயர்த்திடும் என்று நம்புவோம்.
பல இடர்களைச் சமாளித்து, சவால்களைச் சந்தித்துத் துணிச்சலுடன் இவ்வாண்டைத் தாண்டியதுபோல் வரும் ஆண்டையும் நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
நம்மால் ஆகாதது எதுவுமில்லை…
இப்புத்தாண்டில் அவரவர் வாழ்வில் எல்லோரும் பார்போற்ற பலவிதப் புதுமைகளைப் படைத்துப் புன்னகையுடன் பூத்துக்குலுங்க என் சக்கரைதடவிய கவிவார்த்தைகளால் வாழ்த்துகிறேன்…