2020 – ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் : வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ்

சனி, 19 டிசம்பர் 2020 (22:41 IST)
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் அடுத்த யார் அதிபராகப் பதவியேற்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் உற்றுக் கவனிக்கும். அத்தனை ஊடகங்களும் பெரும் ஆர்வமுடன் அங்கு நடக்கும் நிகழ்வுகளையும்  செய்திகளையும் சுடச் சுடத் தருவார்கள். அந்தளவுக்கு சர்வவல்லமையும் அதிகாரத்தோரணையும் வல்லரசு என்ற ஆதிக்கத்தையும் கொடுக்கக்கூடிய பதிவியே அது.

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்பும் குடியசுக் கட்சி சார்பிலும், ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிட்டனர்.  மொத்தமுள்ள 538 பிரதிநிதிகளின் வாக்குகளில் 290 வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஜோ பிடன் அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வாகி உள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக வயதுள்ள அதிபர் ஜோ பிடன் தான். அவர் அடுத்த வருடம் (2021)ஜனபரி 20ஆம் தேதி பதபியேற்கும்போது, அவரது வயது 78 ஆக இருக்கும் என தெரிகிறது.

ஆனால் இதில் வழக்கத்திற்கு மாறாக ஒரு அதிபருக்கு இணையான அத்தனை பரவலாக எல்லோராலும் கவனிக்கப்பட்டு, ஊடகங்களால் பெரிதும் பேசப்பட்டவர்தான் அமெரிக்கத் துணைஅதிபராகத் தேர்வான கமலா ஹாரிஸ். அவரது முகத்தில் புன்னகை வழியும் புகைப்படமோ அவரது பேச்சுகளோ அவரது சமூக ஊடகப் பதிவுகளோ வராமல் ஒரு ஊடகங்களும் சமூக வலைதளப் பேச்சுகளும் இல்லையென்பதுபோல் அவர் மழையில் நனைவதும், சித்தி என்று தனது தாய்வழி இந்திய உறவினரை அழைத்தது எனப் பலநிகழ்வுகள் இந்த ஆண்டில் கூகுளின் முக்கிய தேடுவதலாக இருந்தது. அவரது ஆளுமை அனைவராலும் சிலாகிகப்பட்டும் போற்றப்பட்டதும் அவரது வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையாக இருந்தது. ஒரு கறுப்பினப் பெண் அமெரிக்கத் துணைஅதிபராகப் போட்டியிடவுள்ளார் அதுவும் அவர் இந்தியா வம்சாவளியைச் சார்ந்தவர் என்பதால் அவர் மீது பல எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. அந்த நம்பிக்கையை தனது வெற்றியின் மூலம் அவர் காப்பாற்றிவிட்டார். தற்போது அமெரிக்க மக்களுக்கு  தனதுபொறுப்பான பதவியின் மூலம் சேவை ஆற்றவிருக்கிறார். இதுவரை அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற தேர்தல்களில் கமலா ஹாரிஸ் அளவுக்கு துணை அதிபர்கள் எவரும் பேசப்பட்டிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். இதற்கு நவீன இணையதளச் சாதனங்களும் சமூக ஊடகங்களும் ஒருகாரணம் என்று கூறினாலும்கூட கமலாஹாரிஸ் கடந்து வந்த பாதைகளும் அவரது உழைப்பும் அவருக்கான உயர்ந்தபட்ச இடத்தைத் தீர்மானித்துள்ளது. அடுத்த நான்காண்டுகள் கழித்து, இன்னும் ஒரு அடி தூரமே உள்ள அமெரிக்க அதிபர் பதவியை அவர் அலங்கரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை; ஏனென்றால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் அவர் அப்பதவிக்குத் தகுதியானவர் ஆற்றல்வாய்ந்தவர் என்பதை மனதார ஒப்புக்கொண்டுள்ளதுபோல் அவரது வெற்றியே பறைசாற்றுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இரண்டுமுறை மட்டுமே பெண்கள் துணை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டுள்ளனர். 1984 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி சார்பில்  ஜெரால்டின் பெரோராவும், 2008 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பில் சாரா பாலினும் போட்டியிட்டனர் ஆனால் இவர்களுக்கு வெற்றிகிட்டவில்லை. அறிஞர் அண்ணா தனது புத்தகத்தில் அமெரிக்க ’வெள்ளைமாளிகையில் ஒரு கறுப்பினத்தவர்’ அதிகாரப்பதவி வகிப்பது என்பது பெரும் கனவு என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் கனவை முதலில் வசப்படுத்தியவர் பராக் ஒபாமா. ஒருபேராசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவருக்கு மக்களின் செல்வாக்கு அதிகளவில் இருக்கவே கடந்த 2009 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அமோகவெற்றி பெற்று 44 வது அதிபராகப் பொறுப்பேற்று,ஜார் வாஸிங்கடனின் பிரகடனத்தைபோல் தொடர்ச்சியாக இரண்டுமுறை மட்டுமே அவர் அப்பதவியை அலங்கரித்தார். ஆனால் முதல் கறுப்பின அதிபர் என்று வரலாறு அவரைத் தன நெஞ்சில் பொறித்து மேற்கத்திய நாட்டின் போக்கையே மாற்றியமைத்தது. தன்னிகரகற்ற தன் ஆட்சியால் மக்களின் மனதைக் கவர்ந்தார் அமைதிக்கான நோபல் பரிசும் அவரைத் தேடி வந்தது. அந்நாட்டில் இளைஞர்களுக்கு இன்றும் பராக் ஒபாமா ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையான ஆனால் அரசியல் ஹீரோ. இவரது ஆட்சிக்காலத்தில் துணை அதிபராகப் பதவிவகித்தவர்தான் ஜோ பிடன்( தற்போதைய அமெரிக்க அதிபர்). தொடர் முயற்சியின் மூலம்தன் வெற்றியைச் சாத்தியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஒபாமாவை அடுத்து இரண்டாவது கறுப்பினத்தவராக அமெரிக்காவின் உயர்ந்த பதவியேற்கவுள்ளார்  கமலா ஹாரிஸ்(55).

அவரது பூர்வீகம் ’தமிழ்நாட்டில் திருவாரூரில்  உலள்ள துளசேந்திரபுரம். கமலாவின் பெற்றோர்( தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்) விவாகரத்துப் பெற்றபின் தனது தாய் ஷ்யாமலா கோபாலன் ஹாரிஸால் கமலா ஹாரிஸ் வளர்க்கப்பட்டார். இந்தியப் பாரம்பரியத்தைக்கொண்டவர் என்றாலும் தனது தாய் தன்னை ஓக்லாந்து கறுப்பின கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டதாகவும் தனது இரு மகள்களையும் அப்படியே வளர்த்தாகவும், இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டுதான் தன்னையும் தன் சகோதரியையும் வளர்த்ததாக’ கமலா ஹாரிஸ் தனது சுயசரிதை ’’தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்’’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். உலகில் புகழ்மிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஹமலா ஹாரிஸ் தன்னை செதுக்கிக்கொண்டார்.

அங்கு நான்கு ஆண்டுகள் பல்கலைக்கழகப் படிப்புக்கு பின்,  அவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி என்ற அலுவலகத்தில் தனது ஆரம்பக்கட்ட பணியைத் தொடங்கினார். இதையடுத்து, 2003 ஆம் ஆண்டு ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தில் அட்டர்ஜி ஜெனரல் என்ற பொறுப்பேற்றார். பின்னர், கலிபோர்னியா மாகாணத்தில் முதல் பெண் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சாதனைப் படைத்தார்.அங்கு இருமுறை அட்டர்ஜி ஜெனரலாக பதவிவகித்த கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்காவின் துணைஅதிபராக பல இளைஞர்களுக்கும் கறுப்பின மக்களுக்கும் பெரும் நம்பிக்கையளிப்பவராகப் பதவியேற்கவுள்ளார்.

அவரது வாழ்க்கையும் அவரது கடுமையான உழைப்பும் இந்த உயரத்திற்குக்கொண்டு வந்துள்ளது என்று அவரே குறிப்பிட்டுள்ளதுபோல் இன்னும் கைக்கு எட்டும்தூரத்தில்தான் உலகையே ஆட்டுவிக்கும் அமெரிக்க அதிபர் பதிவியுமுள்ளது. அதையும் இன்னும் சில ஆண்டுகளில் அவர் அலங்கரித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவும் கறுப்பின மக்களுக்கும் பெருமை சேர்ப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்