’மோடி இல்லாவிட்டால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்’

திங்கள், 20 ஜனவரி 2014 (15:02 IST)
FILE
இந்த ஆண்டின் மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும். அதற்கு வாய்ப்பு ஏற்படாவிட்டால் ஜெயலலிதா பிரதமராக வருவதற்கு பா.ஜ.க. ஆதரவளிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சோ. ராமசாமி கூறினார்.

துக்ளக் வார இதழின் 44ஆவது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் சோ பேசியதாவது:

அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, டில்லியில், 28 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. அக்கட்சிக்கு எதிராக, 72சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.ஆம் ஆத்மி, ஓட்டுகளை பிரிக்கும் கட்சியாகவே இருக்கும். அதனால், எந்தப் பயனும் இல்லை. கெஜ்ரிவால், அரசு அதிகாரியாக இருந்தவர். அவர், வெளிநாட்டுக்கு படிக்க சென்றது தொடர்பாக, அரசுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில், அதை செலுத்தவில்லை. நடவடிக்கை பாயும் என்ற நிலையில், அவர் பணத்தை செலுத்தினார். அவரது கட்சியில் உள்ளவர்களும், பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களே.

அவர்கள் மீதும், பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த சில நாட்களில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, தன் முந்தைய நிலையை, கெஜ்ரிவால் மாற்றிக் கொண்டே வருகிறார். தமிழகத்தில், விஜயகாந்தின், தே.மு.தி.க.,வுக்கு, ஓட்டு வங்கி இருந்தது. இப்போது, அது சரிந்து விட்டது. அக்கட்சி, யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், அந்த கூட்டணி பெரும் வெற்றி பெறும் என, சொல்ல முடியாது.

தமிழகத்தில், திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்தாலும், பயங்கரவாதத்தை அடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. ஜெயலலிதா மீது தொடரப்பட்ட,12 வழக்குகளில், 11 வழக்குகளில்,அவர் விடுதலை ஆகிவிட்டார். மீதமுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில்,அரசியல் தலையீடு உள்ளது. நீதிபதிகளை மாற்றுவது, வழக்கறிஞர்களை மாற்றுவது போன்ற வேலைகளை, மத்திய அரசில் செல்வாக்குப் பெற்றுள்ள, தி.மு.க., செய்கிறது. இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு எப்படியாவது தண்டனை கிடைத்து விடாதா என, அக்கட்சி நினைக்கிறது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கிலும், ஜெயலலிதா விடுதலையாவார்.

தி.மு.க., குடும்பக் கட்சியாகி விட்டது. அக்கட்சியின் தலைவர்,கருணாநிதியின் மீது, தொண்டர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. குடும்ப அரசியல் காரணமாக அது, இப்போது குறைந்து விட்டது. குடும்பக் கட்சியாக உள்ள, தி.மு.க.,வுக்கும், அதனுடன் கூட்டணி சேரும் கட்சிக்கும், லோக்சபா தேர்தலில், ஓட்டுப் போடக் கூடாது. அந்தக் கூட்டணியை வீழ்த்த வேண்டும். இமாலய ஊழல்களுக்குக் காரணமான காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. மத்தியில், மூன்றாவது அணி வரும் என்பதற்கு வாய்ப்பில்லை. மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ள, கட்சிகளுக்கு இடையே, ஒற்றுமை இல்லை. ஒரு கட்சி, மற்றொரு கட்சிக்கு எதிரியாக உள்ளது. இக்கட்சிகள் இணைந்து, மூன்றாவது அணியை அமைக்க வாய்ப்பு குறைவு. தமிழகத்தில், கூட்டணிகள் உருவாவதில், குழப்பமான சூழல் உள்ளது. பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்து, மோடியை பிரதமராக்குவது முதல் குறிக்கோள். ஒருவேளை, இதற்கு வாய்ப்பில்லை எனில், ஜெயலலிதா பிரதமராக, பா.ஜ., ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு, சோ பேசினார்.

முன்னதாக, வாசகர்களின் கேள்விகளுக்கு சோ பதிலளித்தார். சிதம்பரம் கோயில் பிரச்சினை சம்மந்தமாக ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு...

“தற்போதைய சூழலில் ஆலயங்களை அரசு நடத்துவதே நல்லது என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் ஆலயம் என்றால் தங்கள் கைக்காசுகளைப் போட்டு பணியாற்றும் தர்மகர்த்தாக்கள் இருந்தார்கள். ஆனால் தற்போதைய சூழலில் தனியார் வசம் ஆலயங்கள் சென்றால் குழப்பமே ஏற்படும் என்று கருதுகிறேன்” என்றார் சோ.

அதைத் தொடர்ந்து ‘2014 நாடாளுமன்ற தேர்தல்’ என்ற தலைப்பில் பா.ஜ.க.வின் இல.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த டி.கே.ரங்கராஜன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பேசினார்கள். இல. கணேசன் பேசும் போது, யார் பிரதமராக வேண்டும் என்ற தனது கருத்தை சோ தெளிவுப்படுத்தியாக வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் ஆட்சியின் வராலாறு காணாத ஊழல்களை அவர் கிண்டல் செய்தார்.

“காங்கிரஸ் ஆட்சி ஒழிய வேண்டிய ஒன்றுதான். ஆனால் பா.ஜ.க. அதற்கு மாற்று அல்ல. அவை இரண்டும் பங்காளிகள்தான். மூன்றாவது மாற்று அணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” என்று டி.கே.ரங்கராஜன் பேசினார்.

“ஊழல், விலைவாசி உயர்வு, பாதுகாப்பு ஆகியவை ஒரு கட்சிக்கே சொந்தமானவை அல்ல” என்று குறிப்பிட்ட பீட்டர் அல்போன்ஸ், துக்ளக் வாசகர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காவிட்டாலும், தனது கட்சியின் கருத்தைத் தெரிவிப்பதற்காகவே வந்ததாகக் கூறினார்.

விழாவில் பத்திரிகையாளர் குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடன் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். விழா நடந்த மியூசிக் அகாடமி அரங்கத்தில் இடம் இல்லாத நிலையில் வெளி வராண்டாவில் மக்கள் அமர்ந்து ரசித்தார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்