இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது நடந்து வரும் பெர்த் டெஸ்ட்டில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கு பெர்த் ஆடுகளம் உகந்ததல்ல. இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் தடுமாறி நிலைகுலைந்ததை நாம் பார்த்தோம். ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சுதாரித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வழிநடத்தி சென்றார் ஜெய்ஸ்வால் என்றே சொல்லலாம்.
அவரின் இந்த அற்புதமான் இன்னிங்ஸின் போது வர்ணனையாளர்கள் அவரை நியு கிங் என வர்ணித்தனர். அதன் மூலம் கோலிக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வழிநடத்தப்போகும் புதிய பேட்ஸ்மேனாக உருவாகிவிட்டார் ஜெய்ஸ்வால் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. இதற்கு முன்னர் பெர்த் மைதானத்தில் சதமடித்த இந்திய வீரர்களாக சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியவர்கள் மட்டுமே இருந்த நிலையில் ஐந்தாவதாக அந்த பட்டியலில் இணைந்துள்ளார் ஜெய்ஸ்வால்.