வினேஷ் போகத் உடலில் எடை அதிகமானது எப்படி?... சர்வதேச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதம்!

vinoth

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (15:54 IST)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ மல்யுத்த பிரிவில் விளையாடி வந்த அவர் இறுதிப் போட்டிக்கு முன்பாக திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடல் எடை 50 கிலோவுக்குக் கூடுதலாக 100 கிராம் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இதனால் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றும் அவர் எந்த பதக்கமும் பெறாமல் போனது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் வினேஷ் போகத் சார்பாக “100 கிராம் எடையுயர்வு என்பது ஒரு வீரரின் உடலின் அளவில் 0.2 சதவீதம் அளவுதான். வெயில் காலத்தில் உடல் அதிகளவு தண்ணீரை சேர்த்துவைத்துக் கொள்ளும் என்பதால் இந்த எடை அதிகரித்திருக்கலாம். அதுமட்டுமில்லாமல் அவர் ஒரே நாளில் மூன்று போட்டிகளை விளையாடியுள்ளார். அதன் காரணமாக அவர் உடலில் சக்தி பெறுவதற்காக அதிக உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அவர் எந்த ஏமாற்றும் நோக்கத்தோடும் இதை செய்யவில்லை. கடினமான முயற்சியின் மூலமாகவே அவர் இறுதிப் போட்டிவரை முன்னேறியுள்ளார். அதனால் அவருக்கு நியாயமான வெள்ளிப் பதக்கத்தைக் கொடுக்கவேண்டும்.” என வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்