வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்துக்கு தகுதியானவர்… சச்சின் டெண்டுல்கர் ஆதரவு!

vinoth

சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:53 IST)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத எடை கூடுதலாக இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ மல்யுத்த பிரிவில் விளையாடி வந்த அவர் இறுதிப் போட்டிக்கு முன்பாக திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடல் எடை 50 கிலோவுக்குக் கூடுதலாக 100 கிராம் இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இதனால் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றும் அவர் எந்த பதக்கமும் பெறாமல் போனது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஒவ்வொரு விளையாட்டுக்கும் அதற்கான விதிகள் உள்ளன. ஆனால் தேவைப்பட்டால் அவற்றை நாம் மறுபரிசீலனை செய்யலாம். வினேஷ் போகத் நேர்மையான முறையில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தன்னுடைய எடைக் காரணமாக இறுதிப் போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அவரிடம் இருந்து வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டது லாஜிக்கையும் விளையாட்டு உணர்வையும் மீறிய செயல்.

ஒரு வீரர் விளையாட்டு விதிமுறைகளை மீறியது மற்றும் ஊக்கமருந்து பயன்படுத்தியது போன்ற செயல்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அவருக்கான பதக்கத்தைப் பறிப்பது நியாயமானது. வினேஷ், தனது போட்டியாளர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னேறியுள்ளார். அதனால் அவர் பதக்கத்துக்கு தகுதியானவர்.  நடுவர் மன்ற தீர்ப்புக்காக நாம் காத்திருப்போம். வினேஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்