கடந்த மாதத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. அதையடுத்து அவருக்கு மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து இப்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகருமான கங்குலி பண்ட்டிடம் தான் இரண்டு முறை பேசியதாகக் கூறியுள்ளார். மேலும் “அவருக்கான மாற்று வீரரைக் கண்டறிவது சவாலான காரியம். அவர் எப்படியும் இதைக் கடந்து ஓரிரு ஆண்டுகளில் அணிக்காக விளையாடுவார்” எனக் கூறியுள்ளார்.