உத்தர பிரதேசத்தின் ஷாகரன்பூரில் உள்ள அம்பேத்கார் விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் மாநில அளவிலான 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீராங்கனைகள் வந்திருந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுநீர் கழிக்கும் சிங்க் அருகே தட்டில் உணவு வகைகள் பரப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு பதார்த்தம் வெறும் பேப்பரில் தரையில் வெறுமனே வைக்கப்பட்டு இருந்தது. வீராங்கனைகளும், உடன் வந்தோரும் வேறு வழியின்று அவ்வுணவை சாப்பிட எடுத்து செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ இந்தியா முழுவதும் தற்போது விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் அதைப் பகிர்ந்து “வீரர்கள் கழிவறையில் அமர்ந்து உணவு சாப்பிடுவது நெஞ்சைப் பதறவைக்கும் விதமாக உள்ளது. உடனடியாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.