குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
அன்று முதல் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ஐபிஎல் தொடர் தொடங்கி முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி மூன்றையுமே தோற்றதால் பாண்ட்யாவுக்கு எதிரான ட்ரோல்கள் அதிகமாகின. அதுமட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அவர் மைதானத்தில் இருக்கும்போதோ, பேட் செய்யும் போதோ அவரை வெறுப்பேத்தும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சீசனோடு ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குட்பை சொல்வார் என எதிர்பார்க்கபடுகிறது. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் அம்பாத்தி ராயுடு “எந்த அணிக்கு செல்ல வேண்டுமென்பதை ரோஹித் ஷர்மாதான் முடிவு செய்வார். எல்லா அணிகளுமே அவரை தங்கள் அணியின் கேப்டனாக்க விரும்புவார்கள். மும்பையை விட அவரை நன்றாக நடத்தும் அணிக்கு அவர் செல்வார்” எனக் கூறியுள்ளார்.